Thursday, October 27, 2011

ஏன் தமிழ் திரைக்கதை?

ஒரு தமிழ் வாத்தியார், பதினொன்றாம் வகுப்பு... சங்க இலக்கிய பாடம்... எப்போதும போல் கேட்கும் கேள்வியொன்றை கேட்கிறார், " என்ன எழவுக்காக இந்த பாட்டெல்லாம் எழுதணும்?". வினாவின் நோக்கம் இலக்கியத்தின் பயன் என்ன என்பதே. கேட்ட தொனி அவர் பாணி. ஒரு புத்திசாலி அல்லது புத்திசாலி போல் காட்டிக்கொள்ள விரும்பும் மாணவனின் பதில், " மொழியை வளப்படுத்துவதற்காக..." வாத்தியாருக்கு அந்த பதிலில் பத்து பைசாவிற்கு கூட திருப்தி இல்லை. உதட்டை பிதுக்கியவாறே, " மொழிய வளத்து என்னய்யா பன்னபோறோம் ?". வகுப்பறையில் மயான அமைதி. ஆசிரியர் அனைவர் கண்களையும் ஊடுருவி பார்த்துக்கொண்டிருக்கிறார் . சிந்திப்பது போல் பல மாணவர்கள் நடித்துகொண்டிருநதனர் . திடீரென்று ஒரு மாணவன், " மக்களை மகிழ்விப்பதற்காக..." என்றான். இது கொஞ்சம் பரவாயில்லையான பதில் என்று அவருடைய முக பாவனையில் உணர முடிந்தது. ஆனாலும் வாத்தியார் இன்னும் திருப்தி அடையவில்லை. எதிர்மறையாக தலையசைத்தார். அந்த முன்னேற்றம் "மக்கள்" என்ற வார்த்தைக்காகவா? இல்லை "மகிழ்ச்சி" என்ற வார்த்தைக்காகவா? புரியவில்லை. புத்திசாலி நடிப்பு மாணவன், " மக்களின் வாழ்கையை பதிவு செய்வதற்காக..." என்றான் . ஆசிரியர் , " புடிச்சிடான்யா ..."மாணவனின் முகத்தில் மலர்ச்சி பெருமிதம் , " இங்க ஒருத்தன் கரெக்டா புடிச்சிட்டான்." ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யாரை கரெக்ட் செய்வதற்காக இவ்வளவு சீன் போடுகிறான் என்று சலித்துகொண்டனர் பிற மாணவர்கள். ஆக சகல மாணவர்களுக்கும் ஆசிரியர் சொல்லிகொள்வது என்னவென்றால் இலக்கியத்தின் பயன் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வது என்பதே. இதனால் சகலமானவர்களுக்கும் நான் சொல்லிகொள்வது என்னவென்றால் திரைக்கதை என்னும் இலக்கிய வடிவமும் அதற்கு விதி விலக்கு இல்லை என்பதே.
இதனை சங்க காலத்தில் இருந்து சரிவர புரிந்து செயல் பட்டுகொண்டிருக்கும் நாம், திரைக்கதகான இலக்கணத்தை தொல்காப்பியர் சொல்லாததாலோ என்னமோ அந்த கொள்கையிலிருந்து சில பல நேரங்களில் வழுவ நேரிடுகிறது.
திரைக்கதை இலக்கணத்திற்கான பல ஆராய்ச்சிகள்
ஹாலிவுட்டில் கடந்த அறை நூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகின்றது. அவர்கள் அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். திரைக்கைதைக்கான இலக்கணத்தை புரிந்துகொள்வதற்கான முயற்சியே இந்த வலைப்பூவின் நோக்கம்.
அந்த புரிதல் எப்படியெல்லாம் சாத்தியமாகிறது என்று பார்ப்போம்.
  1. எந்த ஒரு கலையையும் கற்றுக்கொள்வதற்கு அந்த கலையின் முந்தைய படைப்புகளை ஆழமாக ஆராய்வது மிகவும் அவசியம். ஒரு எழுத்தாளர் நிறைய படிக்க வேண்டும் என்பது போல. அந்த வகையில் இந்த வலைப்பூ பல்வேறு திரைப்படங்களின் திரைக்கதை அமைப்புகளை அலசி ஆராயும் களமாக அமையும். வாசகர்கள் இதனை திரை விமர்சனத்துடன் குழப்பி கொள்ளக்கூடாது. இந்த அலசலானது ஒரு குறிப்பிட்ட திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா ? என்று எனது கருத்தை சொல்லும் கட்டுரை அல்ல.உங்களுக்கு பிடித்த / பிடிக்காத இயக்குனர் அல்லது நடிகரின் திரைப்படத்தை உயர்த்தியோ மட்டம் தட்டியோ எழுதுவது இதன் நோக்கம் அல்ல.மாறாக ஏற்கனவே வெற்றி/ தோல்வி நிர்ணயிக்கப்பட்ட படத்தில் பார்வையாளர்களின் உணர்வுகளை ஒரு திரைக்கதை ஆசிரியர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதன் விவாதமே ஆகும். ஒரு காட்சி ஒரு திரைபடத்தில் உணர்வுப்பூர்வமாக வெற்றிபெற்றால் அதன் பின்னணியில் இருக்கும் இலக்கணங்கள் யாவை, அவை மற்ற திரைப்படங்களில் எவ்வாறு மாறுபட்டு அல்லது ஒருமித்து உபயோகிக்கப்பட்டுள்ளது என்று ஒரு திரைப்பட பயிற்சி மாணவர்களுக்கான கல்வியியல் தொனியிலேயே எழுத வேண்டும் என்பது என் விருப்பம். இந்த objectivity ஆனது ஒரு மாணவனுக்கு மிகவும் முக்கியம் என்பது எனது கருத்து.
  2. திரைக்கதை மற்றும் கதை அமைப்புகளுக்கான பல்வேறு நாட்டு அறிஞர்களின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வதும் பலநேரங்களில் பல்வேறு திரைக்கதை பிரச்சனைகளை கையாள பெரிதும் உதவும். இந்த வலைப்பூ அதற்க்கான களமாகவும் அமைய வேண்டும் என்பதும் என் விருப்பம்.
  3. உண்மையான பொழுதுபொக்கு என்பது வெகுஜன ரசனையே என்பதை ஆழமாக நம்புபவன் நான். பெரும்பாலான இனைய பதிவர்கள் உலக சினிமாக்களை மட்டுமே அலசி எழுதக்கூடும். அனால், அவற்றில் பெரும்பாலான இலக்கணங்கள் நமது வெகுஜன ரசனைக்கு ஏற்றதாக இருக்காது. மேலும் இவ்வாறன உலக சினிமாக்கள் சினிமாவின் அடிப்படை மரபுகளை மீறுவதாலேயே சர்வதேச அளவில் புகழப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் இத்தகைய திரைக்கதையை பின்பற்றி படமெடுக்கும் மாணவர்கள் போதுமான வெகுஜன பாராட்டை பெற முடியாமல் சோர்ந்து போவதை பார்த்த பின்பே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். இதை உலக சினிமா ஆதரவாளர்கள் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். எல்லா மாணவர்களுக்கும் அத்தகைய மரபு மற்றும் இலக்கணம் மீறிய திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது இலட்சியமாக இருத்தல் அவசியம். ஆனால், திரைக்கதையின் சில பல மரபுகளையாவது புரிந்துகொண்ட பின்னர் அவற்றை உடைத்தல் நல்ல பலனை தரும். அரங்கு நிறைந்த கைதட்டல், சிரிப்பொலி, கண்ணீர் இவையே ஒரு படைப்பாளியின் உண்மையான விருது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
மக்களின் வாழ்கையை பதிவு செய்வதற்கும் இதற்குமென்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நாம் ஆதி காலம் தொட்டே அணைத்து தகவல்களையும் கதைகளாகவே உட்கொண்டு பழகிவிட்டமையால், சமகாலத்து உண்மைகளையும் தகவலாக மட்டும் சொல்லாமல் கதையினூடாக சொல்லும் முயற்சியே சிறுகதை, நாவல், கவிதை, குறு நாவல், அப்படியே நமக்கு திரைக்கதை. உண்மை எப்போதுமே கசக்கும். அதை எப்படி இனிக்க இனிக்க சொல்லுவது என்னும் பரிட்சையே இலக்கியம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யாப்பு, அணி இலக்கணம் தந்த தமிழ் மொழியில் திரைக்கதை இயற்றப்போகும் நமக்கு இந்த வித்தை ஒன்றும் புதிதல்ல. வாருங்கள் தமிழ் திரைக்கதை இலக்கணம் விவாதிப்போம்...